லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

Update: 2018-04-06 22:15 GMT
பூந்தமல்லி,

சென்னை கோடம்பாக்கம் அஜித் நகரைச்சேர்ந்தவர் மியாக்கன் அலித் (வயது 19). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய நண்பர் லோகேஷ் (19). இவரும், மியாக்கன் அலித்துடன் அதே கல்லூரியில் ஒன்றாக படித்து வருகிறார். நண்பர்கள் இருவரும் தினமும் ஒன்றாகவே ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

நேற்று காலை வழக்கம்போல் நண்பர்கள் இருவரும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை லோகேஷ் ஓட்டினார். அவருக்கு பின்னால் மியாக்கன் அலித் அமர்ந்து இருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயல் அருகே சென்றபோது அவர்களுக்கு பின்னால் வந்த கலவை எந்திர லாரி, எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது சாலையில் விழுந்த மியாக்கன் அலித் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிக்கொண்ட அவர், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடைய நண்பர் லோகேஷ், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான மியாக்கன் அலித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அர்ஜூனன் (42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்