நூதன முறையில் தொடரும் சம்பவங்கள்: மதுரை விமான நிலையத்தில் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு

நூதன முறையில் தொடரும் சம்பவங்களால் மதுரை விமான நிலையத்தில் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-04-06 22:00 GMT
மதுரை ,

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் சிங்கப்பூருக்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய விமான நிலையமாக மதுரை மாறி இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களின் வருகை அதிகரித்துள்ளதைப்போல், கடத்தல் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் செல்கின்றன. அதிலும் கடத்தல் சம்பவங்கள் வழக்கம்போல் நிகழாமல் நூதன முறைகளில் அரங்கேற்றம் செய்யப்படுகிறது.

கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக சுங்கத்துறையில் உதவி கமிஷனர், சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சிப்பாய் என்ற 20 பேர் கொண்ட குழு இருக்கிறது. இந்த குழுவினர் பாதுகாப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களையும் தாண்டி தங்கம் கடத்தி வருவது கடத்தல்காரர்களின் தனித்திறமையாக இருக்கிறது.

விலை உயர்ந்த பொருளை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு கொண்டு சென்று ஒப்படைப்போரை குருவிகள் என கூறுவார்கள். இங்கிருந்து கடத்தல் பொருளை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று விட்டு அந்த நாட்டில் இருந்து திரும்பும்போது அங்கிருந்து விலை உயர்ந்த ஒரு பொருளை மீண்டும் கொண்டு வந்து இங்குள்ளவர்களிடம் ஒப்படைக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு சதவீதத்தின் அடிப்படையில் பணம் வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக மதுரையில் இருந்து போதைப்பொருள், துணி, வெளிநாட்டு பணம் உள்ளிட்ட பொருட்களை இலங்கை, சிங்கப்பூருக்கு கடத்தி சென்று விட்டு, அங்கிருந்து மதுரை வரும்போது தங்கமோ, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையோ கடத்தி வருவது தான் இவர்களதுவேலை. இவர்களுக்கான டிக்கெட் செலவுகளை கடத்தல் கும்பல்கள் பார்த்துக்கொள்வார்கள். சமீபகாலமாக மதுரை விமான நிலையத்தில் குருவிகள் என்ற பெயரில் ஏராளமானவர்கள் சுற்றத்தொடங்கினர். இவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக கடத்தல் சம்பவங்களும் அதிகரித்தன.

குருவிகள் எனப்படும் கடத்தல்காரர்கள், வெளிநாடுகளில் இருந்து சிகரெட், மதுபானம், எலக்ட்ரானிக்ஸ், புரோட்டின் புவுடர் போன்ற பொருட்களையும் கடத்தி வருகின்றனர். இதுபோன்ற பொருட்களுக்கு நம்நாட்டில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதன்காரணமாகவே அளவுக்கு அதிகமான பொருட்களை வெளிநாட்டில் இருந்து கடத்தல்காரர்கள் கடத்தி வருகின்றனர். மதுரையை பொருத்தமட்டில் சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திருச்சியை சேர்ந்தோர் குருவிகளாக இயங்கினர். கடத்தலின்போது பிடிபட்டால் கூட அந்த பொருளுக்கான வரியை கட்டி விட்டு தப்பித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாக மதுரை விமான நிலையத்தில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

கடத்தல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் தமிழக சுங்கத்துறையின் தலைமையிடமான திருச்சியில் உள்ள உயர் அதிகாரிகளால் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு கடத்தல்காரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார். கொண்டு வருகிற பொருளுக்கு சரியான முறையில் வரிகட்டவில்லை என்றால் கூட அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போதைய நடவடிக்கை கடத்தல்காரர்கள் மட்டுமின்றி ஒரு சில சுங்கத்துறை ஊழியர்களுக்கும் கலக்கத்தை கொடுத்திருக்கிறது.

கடந்த 2 மாதத்தில், மதுரை விமான நிலையத்தில் தங்க பிளேடாக மறைத்து வைத்து ரூ.8 லட்சம் தங்கம் கடத்தல், ரூ.48 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மைக்ரோவேவ் ஓவனில் மறைத்து வைத்து கடத்தியது, மருத்துவ பெல்ட்டில் மறைத்து வைத்து ரூ.12 லட்சம் தங்கம் கடத்தல், கார்பன் பேப்பர் மூலம் மறைத்து வைத்து ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல், ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல், சினிமா பாணியில் ரூ.18 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல், ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்கத்தை செல்போனில் மறைத்து வைத்து கடத்தியது என பல்வேறு விதமான கடத்தல் சம்பவங்கள் வித்தியாசமான முறையில் நடந்துள்ளது.

அவை அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோல் ரூ.13 லட்சம் மதிப்பில் அமெரிக்க டாலர் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கடத்தலை தடுத்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்