மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை
மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நேற்று காலை நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் தேவபிரியன், மாநகர தலைவர் ஜெயக்குமார், மாநில பொருளாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வருமான வரி அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்றனர்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் பூட்டு போட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 43 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.