காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவியுடன் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவியுடன் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் நத்தம் அருகே நடந்துள்ளது.

Update: 2018-04-06 22:30 GMT
செந்துறை,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை சாலையில் உள்ள பாப்பாபட்டி விலக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வட்டகிணறு உள்ளது. இந்த கிணற்றில் ஒரு ஆணும், பெண்ணும் பிணமாக மிதப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நத்தம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பிணங்களை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் இறந்து கிடந்தவர் நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்த ராஜதுரை (வயது 19), என்றும், மற்றும் அவருடன் பிணமாக கிடந்த பெண் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி என்பதும் தெரியவந்தது. ராஜதுரை வடமதுரையில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்