தேவாரம் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்து முன்னாள் ஊராட்சி தலைவரை தாக்கி, மனைவியிடம் நகை பறிப்பு

தேவாரம் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்து முன்னாள் ஊராட்சி தலைவரை தாக்கி, அவருடைய மனைவி அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை முகமூடி கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.;

Update: 2018-04-06 21:30 GMT
தேவாரம்,

தேவாரத்தை அடுத்துள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருடைய மனைவி சத்தியபாமா (47). வக்கீலாக உள்ளார். இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் (14) மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு சுதர்சன் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் அவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் வீட்டின் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்துள்ளனர். பின்னர் படுக்கையறைக்குள் கொள்ளையர்கள் நுழைந்தனர். அங்கு சுதர்சன், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த அறையில் பணம், நகைகள் வைத்திருந்த லாக்கரை உடைக்க முயன்றனர். இதில் சத்தம் கேட்டு சுதர்சன் எழுந்தார். அப்போது அங்கு 2 பேர் முகமூடி அணிந்து நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்கள் உருட்டு கட்டையால் சுதர்சனை தாக்கினர். அவருடைய அலறல் சத்தம் கேட்டு, சத்தியபாமா எழுந்து திருடன், திருடன் என்று அபயக்குரல் எழுப்பினார்.

இதையடுத்து அவர்கள் சத்தியபாமா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிசங்கிலியை பறிக்க முயன்றனர். இதில் கொள்ளையர்களிடம் இருந்து தாலிசங்கிலியை மீட்பதற்காக அதன் ஒரு பகுதியை பிடித்து கொண்டு அவர் போராடினார். அதில் தாலியை அவர் பிடித்து கொண்டார். இதனால் கொள்ளையர்கள் சங்கிலியை மட்டும் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

பின்னர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தெய்வேந்திரன், முத்துப்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் கொள்ளையர்கள் சங்கிலியை பறித்துவிட்டு, வெளியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேர்களுடன் தப்பி சென்றது தெரியவந்தது.

சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் தேனியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி தே.சிந்தலைச்சேரி சாலை வரை ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் அந்த பகுதியில் கஜேந்திரன் என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். ஆனால் புது வீடு என்பதால் அங்கு எந்த பொருட்களும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து ரூ.1½ லட்சம் திருடி சென்றனர். தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்