காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், ஆற்றுக்குள் இறங்கி மாணவர்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், ஆற்றுக்குள் இறங்கி மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.;

Update: 2018-04-06 22:00 GMT
தஞ்சாவூர், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் 3-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர்.

இது தவிர மாணவர்கள் அமைப்பினர், விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தஞ்சையில், டெல்டா மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் இளைஞர்கள் சார்பில் தலைமை தபால் நிலையத்தை பூட்டியும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று தஞ்சையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தஞ்சை இர்வின் பாலம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அருகில் இருந்த கல்லணைக்கால்வாய் எனப்படும் புது ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர். பின்னர் அவர்கள் ஆற்றின் கரையிலும் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை வெளியே வருமாறு கூறினர். ஆனால் அவர்கள் வரமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இயக்க நகர செயலாளர் ஜான் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து காந்திஜி சாலை வழியாக ரெயில் நிலையம் நோக்கி நடந்து சென்றனர். பின்னர் ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு ஒருங்கிணைப்பாளர் அருண்சோரி தலைமையில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் நேற்று முன் தினம் வகுப்புகளை புறக் கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்