18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவர் டெல்லியில் மீட்பு

18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவர் டெல்லியில் மீட்கப்பட்டார். தொண்டு நிறுவன உதவியுடன் கல்லிடைக்குறிச்சி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2018-04-06 22:00 GMT
அம்பை, 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளம் இந்திராநகரை சேர்ந்த விவசாயி சீனிப்பாண்டி. இவருடைய மனைவி இசக்கியம்மாள். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவர்களில் 2-வது மகன் சேகர் மும்பையில் இட்லிக்கடை நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக அவருடைய தம்பி சொரிமுத்து இருந்து வந்தார்.

அண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொரிமுத்து அங்கிருந்து சென்றார். இதனை அறிந்த சீனிப்பாண்டி- இசக்கியம்மாள் தம்பதியினர் மகன் காணாமல் போனதை நினைத்து மனவேதனை அடைந்தனர். பல்வேறு இடங்களில் மகனை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியும் ஒரு நாள் மகன் சொரிமுத்து தங்களை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீனிப்பாண்டி நினைத்து இருந்தார்.

இந்தநிலையில் சொரிமுத்து ஊர் ஊராக சென்று கடைசியில்டெல்லியில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளையில் வேலைக்கு சேர்ந்துள்ளர். சிறு வயதிலேயே சென்று விட்டதால் இந்தி மொழி சரளமாக பேசக் கற்றுக் கொண்டார்.

அந்த நிறுவனத்தில் சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சங்கீதா என்பவர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளராக வேலைக்கு சேர்ந்தார். சொரிமுத்துவுடன் பேசி பழகியபோது சிறு வயதில் மும்பைக்கு வந்ததும், அண்ணனுடன் சண்டை போட்டு தப்பிச் சென்று வழிதெரியாமல் கடைசியாக இங்கு வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. பின்னர் சங்கீதா இதுதொடர்பான விவரங்களை, சொரிமுத்துவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள பதிவு பெற்ற அறக்கட்டளைகளுடன் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் இதுபற்றி அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரித்ததில், சொரிமுத்துவின் சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி இந்திராநகர் என்பது தெரியவந்தது. அங்கு சென்று சொரிமுத்துவின் பெற்றோரை சந்தித்து தொண்டு நிறுவனத்தினர் பேசியுள்ளனர்.

பின்னர் சொரிமுத்துவையும், அவரது பெற்றோரையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச வைத்தனர். அப்போது இருவரும் தங்களின் பழைய நினைவுகளை கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தொண்டு நிறுவனத்தினர் சொரிமுத்துவை அம்பைக்கு அழைத்து வந்து, கல்லிடைக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சொரிமுத்துவின் பெற்றோரும் தங்கள் மகன் கிடைத்த சந்தோஷத்தில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களுடன் சொரிமுத்துவின் சகோதரிகளும் வந்தனர். சொரிமுத்து சிறிது மாற்றுத்திறனாளி ஆவார். அவரது உருவ அமைப்பு, நடவடிக்கைகளை பார்த்து, சொரிமுத்து தங்கள் மகன் தான் என்பதை சீனிப்பாண்டி, இசக்கியம்மாள் உறுதி செய்தனர்.

இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி இருவரிடமும் விசாரித்து, தனித்தனியாக வாக்குமூலம் எழுதி வாங்கிக் கொண்டார். பின்னர் சொரிமுத்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மகன் சொரிமுத்துவை அவரது பெற்றோர் கட்டித்தழுவி தன்னுடன் அழைத்துச் சென்றனர். சொரிமுத்துவுக்கு தற்போது 30 வயது. 18 ஆண்டுகளுக்கு முன்பு 12 வயதில் மும்பையில் காணாமல் போனவர் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது அவரது உறவினர்கள் இடையே மற்றும் அக்கம்பக்கத்தினர் இடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்