காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினார்கள். எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 1,676 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-05 23:15 GMT
தூத்துக்குடி, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி, கோவில்பட்டி, ஏரல் உள்ளிட்ட இடங்களில் குறைந்த அளவிலான கடைகளே அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள், ஆட்டோ, வேன் வழக்கம் போல் இயங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மாவட்டத்தில் 5 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும், 16 இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்காக தி.மு.க. கூட்டணி கட்சியினர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை முன்பு இருந்து ஊர்வலமாக மேலூர் ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது அந்த வழியில் திறந்து இருந்த கடைகளை அடைக்குமாறு வலியுறுத்தினர். இதனால் சிறிது பரபரப்பாக காணப்பட்டது. ஊர்வலம் டபிள்யூ.ஜி.சி. ரோடு, காசுக்கடை பஜார் வழியாக மேலூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாநகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, திராவிடர் கழகம் பெரியாரடியான் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், முத்து மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ உள்பட 253 பேரை கைது செய்தனர். அவர்களை தூத்துக்குடி கலைஞர் அரங்கில் தங்க வைக்கப்பட்டனர்.

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தூத்துக்குடி- மதுரை நெடுஞ்சாலையில் குறுக்குசாலை பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் காசி விசுவநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் முத்துகுமார், மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜ், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர். அதேபோல் நகர செயலாளர் பச்சைபெருமாள் தலைமையில் ஓட்டப்பிடாரம் பஜாரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 14 பேரை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. சென்னை- நெல்லை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 10.30 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஓடிச் சென்று, ரெயிலின் முன்பாக அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர பொருளாளர் மந்திரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மகளிர் அணி அமைப்பாளர் இந்துமதி, வர்த்தக அணி ராஜகுரு, நெசவாளர் அணி ராதாகிருஷ்ணன், வக்கீல் அணி ராமச்சந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், உமாசங்கர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன், சி.ஐ.டி.யு. கிருஷ்ணவேணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் காஜா மீரான், இளைஞர் அணி தலைவர் சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 148 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கோவில்பட்டியில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. நகரசபை தினசரி மார்க்கெட், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடியது. ஆட்டோ, கார், வேன்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், மினி பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக பகத்சிங் பஸ் நிலையம் சென்று, சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஊர்வலமாக ரெயில் நிலையம் சென்றனர். அங்கு புறப்பட தயாராக இருந்த திருச்செந்தூர்- பாலக்காடு பாசஞ்சர் ரெயிலின் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், பில்லா ஜெகன், வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு, நகர தலைவர் ராஜாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய துணை செயலாளர் கணபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் தமிழினியன், தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், சமூக நல்லிணக்க பேரவை தமிழ்பரிதி, ஆதிதமிழர் பேரவை மாநில பொறுப்பாளர் அருந்ததி அரசு மற்றும் 26 பெண்கள் உள்பட 147 பேரை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன், ஷீஜாராணி மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் கடைகள் திறக் கப்படவில்லை. தினசரி மார்க்கெட், வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

நெல்லை- திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில், நாசரேத் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்தது. உடனே தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஓடிச் சென்று, ரெயில் மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. நகர செயலாளர் ரவி செல்வகுமார், ம.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் மத்தேயு ஜெபசிங், ஏ.ஐ.டி.யு.சி. கிருஷ்ணராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மரியசூசை, ச.ம.க. ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜா, நகர காங்கிரஸ் தலைவர் ரவிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். ரெயில் மறியலில் ஈடுபட்ட 53 பேரை நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் கைது செய்தனர். நாசரேத்தில் நேற்று முழு கடையடைப்பு நடந்தது.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மெயின் பஜாரில் தி.மு.க. மற்றும் கூட்டணிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க. மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். இதில் ஈடுபட்ட 48 பேரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் 615 பேரும், சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 1061 பேரும் என மொத்தம் 1,676 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்