முன்னாள் ஊராட்சி தலைவருக்கு 2 ஆண்டு ஜெயில்

போலியாக முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ஆணை தயாரித்து முதியோர்கள், விதவைகளிடம் மோசடி செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-04-05 22:32 GMT

வேலூர்,

வாணியம்பாடி தாலுகா நிம்மியம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் (வயது 54). இவர் கடந்த 2011–ம் ஆண்டு தனது ஊராட்சியை சேர்ந்த முதியோர்கள், விதவைகளுக்கு உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பணம் வசூல் செய்துள்ளார்.

அதன்பின்னர் அவர் போலியான ஆணைகளை தயாரித்து, வாணியம்பாடி தனி தாசில்தார் வைஜெயந்திமாலாவின் பெயரில் போலி கையெழுத்திட்டு அந்த ஆணைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கி உள்ளார். அவற்றை பெற்ற முதியவர்கள் உதவித்தொகை வரும் என்று காத்திருந்தனர். ஆனால் பணம் வரவில்லை.

இது குறித்து தர்மலிங்கத்திடம் முதியவர்கள் சென்று கேட்டபோது சில மாதங்கள் கழித்துதான் பணம் வரும் என்று கூறி உள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் முதியோர் உதவித்தொகை கிடைக்காததால் தர்மலிங்கத்திடம் முதியவர்கள் மீண்டும் சென்று கேட்டபோது மறுபடியும் சில நாட்கள் ஆகும் என்று காலம் தாழ்த்தி உள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த முதியவர்கள் மற்றும் விதவைகள் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று தனி தாசில்தார் வைஜெயந்திமாலாவை சந்தித்து, உதவித்தொகை ஏன்? வரவில்லை என்று கேட்டுள்ளனர். ஆணையை வாங்கி பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அவை போலியானது என்பதும், தனது பெயரில் போலியாக கையெழுத்திட்டு முதியவர்களுக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து அவர் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இதில் மாஜிஸ்திரேட்டு அலிஷியா (பொறுப்பு) தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட தர்மலிங்கத்துக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்