அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.1¼ லட்சம் மோசடி
ஊராட்சி செயலாளர்களிடம் இருந்து காசோலைகளை திருடி ஒன்றிய ஆணையாளரின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்தை மோசடி செய்த பெண் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.;
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிகளின் வங்கி கணக்குகள் மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியில் உள்ளது.மேல்சாணாங்குப்பம் ஊராட்சியின் நிதி பற்று, வரவு குறித்து அந்த ஊராட்சியின் செயலாளர் சவுதா என்பவர் சரிபார்த்த போது ரூ.95 ஆயிரம் மாயமாகி இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதேபோன்று சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி செயலாளர் பழனி தனது ஊராட்சி நிதி பற்று, வரவு குறித்து சரிபார்த்த போது ரூ.32 ஆயிரம் மாயமாகி இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இருவரும் மேல்சாணாங்குப்பத்தில் உள்ள வங்கிக்கு சென்று பணபரிமாற்றம் செய்யப்பட்ட விவரங்களை சரிபார்த்தபோது வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது பெயருக்கு 2 ஊராட்சிகளில் மாயமான நிதி மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் உடனடியாக பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அப்துல்கரீமிடம் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் அலுவலர்கள் மேல்சாணாங்குப்பத்தில் உள்ள வங்கி மேலாளரிடம் விசாரித்தனர். அப்போது வீராங்குப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் ரேவதி என்பவருடன் வருபவர் தான் ஜெயசீலன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வீராங்குப்பம் ஊராட்சி செயலாளர் ரேவதியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அப்போது மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி செயலாளர்களின் கைப்பையில் இருந்து காசோலைகளை திருடி, ஒன்றிய ஆணையாளர் அப்துல்கரீமின் கையெழுத்து போன்று போலியாக கையெழுத்து போட்டு ஜெயசீலன் பெயருக்கு மாற்றம் செய்து மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து வீராங்குப்பம் ஊராட்சி செயலாளர் ரேவதி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராமனுக்கு, உரிய ஆவணங்களுடன் அறிக்கையை ஆணையாளர் அப்துல்கரீம் அனுப்பி உள்ளார்.
வீராங்குப்பம் ஊராட்சி செயலாளர் ரேவதி கடந்த 2013–2014–ம் ஆண்டு 100 நாள் பணியாளர்களுக்கான சம்பள தொகை ரூ.2லட்சத்து 50 ஆயிரத்தை வங்கியில் எடுத்து வந்த போது மர்ம நபர்கள் தன்னிடம் இருந்து பறித்து சென்றதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். அப்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவரே பணத்தை கையாடல் செய்துவிட்டு பணம் பறிபோனதாக நாடகம் ஆடிய தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.