காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மேலூர், உசிலம்பட்டியில் தி.மு.க.வினர் சாலை மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மேலூர், உசிலம்பட்டி உள்பட பல இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-05 22:45 GMT
மேலூர்,

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் ரெயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடந்தது. மேலூரில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுயாசின் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோர் கக்கன் சிலை அருகே கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்தனர். வரும் வழியில் திறந்து இருந்த ஒரு மருந்து கடையை மூட கூறினர். இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து போலீசார் விரைந்து சென்று சமரசம் செய்தனர். பின்னர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் செய்த கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொது செயலாளர் சிவகலைமணி அம்பலம், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அழகுபாண்டி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் எழில்வேந்தன் சேதுபதி மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 150 பேரை மேலூர் போலீசார் கைது செய்தனர்.

வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் மதுரை-திண்டுக்கல் சாலையில் வாடிப்பட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மறியல் செய்த 80 பேரும் கைது செய்யப்பட்டனர். சமயநல்லூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் செய்த தி.மு.க. கிளை செயலாளர் வீரக்குமார் உள்பட 66 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரத்தில் போஸ்முத்தையா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது அவனியாபுரம் பைபாஸ் சாலையில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட 120-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கொட்டாம்பட்டியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் புகழேந்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். சோழவந்தானில் மறியல் செய்த தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 79 பேர் கைது செய்யப்பட்டனர்.

உசிலம்பட்டியில் தி.மு.க. நகர செயலாளர் தங்கமலைபாண்டி, ஒன்றிய செயலாளர் சுதந்திரம் ஆகியோர் தலைமையில் தேவர் சிலை அருகே மறியல் செய்த 90 பேர் கைது செய்யப்பட்டனர். எழுமலையில் சேடபட்டி ஒன்றிய செயலாளர் மூக்கையா தலைமையில் மறியல் செய்த 70 பேர் கைது செய்யப்பட்டனர். செல்லம்பட்டி ஒன்றியம் வாலந்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அம்மாவாசி தலைமையில் மறியல் செய்த 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமங்கலத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தி.மு.க.வினர், காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தேவர்சிலை அருகே மெயின்ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது அவர்கள் பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். வக்கீல்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராமசாமி தலைமையில் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூரில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கேட்டுகடையில் சாலைமறியல் நடந்தது. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர் கென்னடிகண்ணன், காங்கிரஸ் வட்டார தலைவர் சுப்பாராயலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தவமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சிந்தனைவளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் பாலமேடு பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியல் செய்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி செக்கானூரணியில் தி.மு.க. மற்றும் கூட்டணிக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட திருமங்கலம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், ஊராட்சி செயலாளர் செல்லப்பாண்டி, ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அய்யாக்கண்ணு, பார்வர்டு பிளாக் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்