ராமேசுவரத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற 229 பேர் கைது
ராமேசுவரத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற 229 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமேசுவரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி நேற்று ராமேசுவரத்தில் தி.மு.க. நகர் செயலாளர் நாசர்கான், அவை தலைவர் சண்முகம், மாவட்ட மீனவரணி செயலாளர் வில்லாயுதம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சிவா, கருணாகரன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பாரிராஜன், நகர் தலைவர் ராஜாமணி, மாவட்ட பொது செயலாளர் களஞ்சியம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பேட்ரிக், நகர் செயலாளர் பாஸ்கரன், சுகநாதன், இந்திய கம்யூனிஸ்டு முருகானந்தம் உள்பட ஏராளமானோர் மேலத்தெருவில் இருந்து திட்டகுடி வழியாக ரெயில் மறியல் செய்ய ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
அப்போது அவர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், வேலம்மாள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அனைவரும் திட்டகுடி சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 15 பெண்கள் உள்பட 229 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல ரெயில் நிலையம் முன்பு தி.மு.க. முன்னாள் நகர் செயலாளர் ஜான்பாய், இளைஞரணி செயலாளர் சுரேஷ், முன்னாள் நகரசபை கவுன்சிலர்கள் பாஸ்கரன், சங்கர் உள்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். தபால் அலுவலகம் முன்பு தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர்கள் தபால் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 19 பேரை போலீசார் கைது செய்தனர். ராமேசுவரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின. கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக ராமேசுவரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்த அளவிலேயே இருந்தது.
இதேபோல கமுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் ஒன்றிய செயலாளர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செந்தூர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் நகர் செயலாளர் அம்பலம், பெருநாழி போஸ், வாசுதேவன், சின்ன உடப்பங்குளம் ஆதி, தொண்டரணி பாண்டி, வண்ணாங்குளம் முத்துராமலிங்கம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்ய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அபிராமத்தில் தி.மு.க. நகர் செயலாளர் முத்து ஜாகீர் உசேன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்வதற்காக ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த முழு கடையடைப்பு காரணமாக கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.