காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட 450 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 450 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஈடுபட்டது.

Update: 2018-04-05 22:45 GMT
திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் அருகே உள்ள குளிக்கரை ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயங்கி விழுந்தார்

இந்த மறியல் போராட்டத்தின்போது குடவாசல் பகுதி மாதர் சங்கத்தை சேர்ந்த சசிகலா (வயது 35) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை கட்சியின் தொண்டர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 450 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் 1 மணி நேரம் காலதாமதமாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்கால் புறப்பட்டு சென்றது. 

மேலும் செய்திகள்