காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரெயில், பஸ் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரெயில் மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ. உள்பட 3,500 பேரை போலீசாரை கைது செய்தனர்.

Update: 2018-04-05 23:00 GMT
நாகப்பட்டினம்,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் தற்போது போராட்ட களமாக மாறி வருகிறது.

இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ரெயில், பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாகையை அடுத்த புத்தூர் ரெயில்வே கேட்டில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், காங்கிரஸ் கட்சி நாகை தெற்குமாவட்ட தலைவர் கனகராஜ், நகர தலைவர் ரவிச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இபுராகிம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் பரிமளசெல்வன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது திருச்சியில் இருந்து வரும் பயணிகள் ரெயிலை மறிப்பதற்காக தி.மு.க. கூட்டணி கட்சியினர் காத்திருந்தனர். ஆனால் காரைக்காலில் இருந்து கரூர் செல்வதற்காக சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் ரெயில்வே கேட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் சென்று சரக்கு ரெயிலை வழியிலேயே மறித்தனர். பின்னர் ரெயில் மீது ஏறிநின்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் நாகை - வேளாங்கண்ணி சாலையிலும் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட ரெயில்வே கேட்க்கு வந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஷ்முக், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் போலீசார், அவர்களை கயிறு கட்டி மறித்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சண்முகம் மூக்கு கண்ணாடி உடைந்து, அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பெண்கள் உள்பட 1,000 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதேபோல் வாஞ்சூர் ரவுண்டானாவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். இந்த சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை நாகூர் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் திருமருகல் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற பஸ் மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசெங்குட்டுவன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாபுஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல், த.மா.கா. வட்டார தலைவர் அழகுசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால், திராவிடர் கழக மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர். இந்த மறியலால் நாகை - நன்னிலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திட்டச்சேரி பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சாலை மறியலில் ஈடுபட்ட 109 பேரை திட்டச்சேரி போலீசார் கைது செய்தனர். அதேபோல் தகட்டூர் கடைத்தெருவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில், நடைபெற்ற பஸ் மறியலில் ஈடுபட்ட 70 பேரை வாய்மேடு போலீசார் கைது செய்தனர்.

கீழ்வேளூர் ரெயில் நிலையம் அருகே மதிவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்கால் சென்ற பயணிகள் ரெயிலை மறித்தனர். பின்னர் ரெயில் என்ஜின் மேலே ஏறி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட மதிவாணன் எம்.எல்.ஏ. உள்பட 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதையடுத்து ரெயில் புறப்பட தயாரானது. அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் முருகையன் தலைமையில் அந்த ரெயிலை மீண்டும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 10 மணிக்கு நாகை செல்ல வேண்டிய ரெயில் 12.30 மணிவரை கீழ்வேளூர் ரெயில் நிலையம் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் நாகூர் புதிய பஸ் நிலையத்தில் நாகை - நாகூர் சாலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த தம்ஜூதீன், ஜாகீர்உசேன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் நவுசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அரமுரசு, அப்துல்காதர். இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க., காங்கிரஸ், மனிதநேய ஜனநாயக கட்சி., விடுதலை சிறுத்தைகள், த.மு.மு.க., முஸ்லிம்லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்து, அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகூரில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், நாகூர் பகுதியில் நிலக்கரி எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை ரத்துசெய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடைகள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வைத்திருந்தனர்.

நாகை மாவட்டத்தில் மொத்தம் 48 இடங்களில் நடைபெற்ற பஸ், ரெயில் மறியல் போராட்டத்தில் மதிவாணன் எம்.எல்.ஏ. உள்பட 3 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்