திண்டுக்கல் மாவட்டத்தில் முழு அடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2018-04-05 23:30 GMT
திண்டுக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்திலும் காலை முதலே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திண்டுக்கல் நகர் பகுதியில் சாலை ரோடு, பெரியகடைவீதி, பஸ் நிலையம், மாநகராட்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சில பெட்டிக்கடைகள் மற்றும் டீ கடைகள் மட்டுமே திறந்திருந்தன. திண்டுக்கல்லை பொறுத்தவரை 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், வெளியூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கத்தினரும் முழு அடைப்பில் பங்கேற்றனர். இதனால் அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 90 சதவீத பஸ்கள் ஓடின. ஆட்டோக்கள், தனியார் பஸ்களும் வழக்கம் போல ஓடின. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இயங்கவில்லை.

முழு அடைப்பு குறித்து திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர் சங்க பொதுச்செயலாளர் மேடா பாலன் கூறும்போது, திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 100 சதவீத கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மாவட்டத்தில் ரூ.150 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கின. அத்துடன் நகரில் உள்ள சுற்றுலா வாகனங்கள் வழக்கம் போல இயங்கின. நகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகுகள் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கம் போல இருந்தது.

பழனியில் பஸ்நிலையம், அடிவாரம், சன்னதி வீதி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் மற்றும் நெய்க்காரப்பட்டி, சத்திரப்பட்டி, கீரனூர், ஆயக் குடி ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக் கப்பட்டு இருந்தன. பஸ்கள் அதிக அளவு இயக்கப்படாததால், பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

ஒட்டன்சத்திரம் வர்த்தக சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதே போல் முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து காய்கனி மார்க்கெட் சங்கம் சார்பில் காந்தி மார்க்கெட்டும் விடுமுறை விடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.

கேரள மாநிலத்துக்கும் , தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன

மாவட்டத்தில் பெரும்பாறை, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை, கொடைரோடு, சின்னாளப்பட்டி, செம்பட்டி, வேடசந்தூர், நத்தம், கோபால்பட்டி, வடமதுரை, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் ஆகிய ஊர்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அய்யலூரில் நேற்று முழு அடைப்பையொட்டி வாரச்சந்தையில் கடைகள் வைக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடந்த முழு அடைப்பையொட்டி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்