காரைக்குடியில் 5 பஸ்கள் கண்ணாடி உடைப்பு
காரைக்குடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் 3 அரசு பஸ்கள் உள்பட 5 பஸ்களின் கண்ணாடியை உடைத்தனர்.
காரைக்குடி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி காரைக்குடி யில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பஸ் மறியல் என போராட்டம் நடைபெற்றது. இதனால் நேற்று காரைக்குடி நகரமே போராட்ட களமாக காட்சியளித்தது. முன்னதாக காலை 10 மணிக்கு கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ஊர்வலமாக சென்று நகரின் முக்கிய பகுதிகளான கழனிவாசல், 100 அடி ரோடு, வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடியில் பஸ் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், புதுவயல் நகர செயலாளர் சுப.சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட 70 பேரை போலீசார் கைதுசெய்தனர். இதேபோல் கோட்டையூர் ஸ்ரீராம்நகரில் சாக்கோட் டை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் ஆனந்த், இளைஞரணி மாவட்ட முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி தலைமையில் பஸ் மறியலுக்கு முயன்ற 50 பேரும், காரைக்குடி நகராட்சி முன்பாக ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 108 பேரும் காரைக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று தேவர் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி தலைமையில் பஸ் மறியல் செய்த 16 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் போராட்டம் நடத்திய தி.மு.க., காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் சிலர் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி சென்ற அரசு பஸ், தேவகோட்டையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் மற்றும் நூறடி ரோட்டில் சென்ற மற்றொரு அரசு பஸ் மீதும் கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தனர். இதனையடுத்து பஸ் கண்ணாடியை உடைத்த கட்சியினரை போலீசார் கைதுசெய்தனர். இதேபோல் காரைக்குடி வாட்டர் டேங்க் பகுதியில் சென்ற தனியார் பஸ் மற்றும் கழனிவாசல் பகுதியில் சென்ற தனியார் மினி பஸ்சின் கண்ணாடியும் அடித்து உடைக்கப்பட்டது.