முழு அடைப்பு போராட்டத்தில் கல்வீச்சு 6 அரசு பஸ்கள் - ஒரு லாரியின் கண்ணாடிகள் உடைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது கல்வீசி தாக்கியதில் 6 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரியின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் 6 பஸ்களின் டயர்களில் இருந்த காற்றை இறக்கி விட்டனர்.

Update: 2018-04-05 22:00 GMT
விழுப்புரம், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

செஞ்சி நான்குமுனை சந்திப்பில் அனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ், கள்ளப்புலியூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் 2 பஸ்களின் பின்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.

இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகர்களான செஞ்சி செட்டிக்குளத்தை சேர்ந்த காதர்பாஷா(வயது 49), செம்மேடு முருகன்(36), கணக்கன்குப்பம் ராஜீவ்காந்தி(36) ஆகியோரை செஞ்சி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சியில் இருந்து கொசப்பாடி நோக்கி சென்ற அரசு பஸ் மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து தாவடிப்பட்டுக்கு சென்ற அரசு பஸ், கச்சிராயப்பாளையத்தில் இருந்து சின்னசேலம் நோக்கி சென்ற அரசு பஸ், புதுச்சேரியில் இருந்து சேலம் நோக்கிச்சென்ற அரசு பஸ்கள் மீது நடந்த கல்வீச்சில் 4 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

மேலும் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தயாராக இருந்த 4 அரசு பஸ்களின் டயர்களில் இருந்த காற்றையும், சித்தானங்கூரில் 2 அரசு பஸ்களின் டயர்களில் இருந்த காற்றையும் சிலர் இறக்கி விட்டனர்.

இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகர்களான உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (32), பிரகாஷ் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விழுப்புரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அதில் பங்கேற்ற சிலர் அந்த அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்கினர். அதோடு அருகில் இருந்த ஒரு லாரியின் கண்ணாடி மீதும் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்தது.

மேலும் செய்திகள்