ஆட்டோ திருடிய வழக்கில் வாலிபர் கைது

ஆட்டோ திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 900 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-04-04 23:30 GMT
நல்லூர், 

திருப்பூர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் பருதுன்னிலா பேகம் தலைமையில் போலீசார் நல்லூர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது நல்லூர் சோதனை சாவடி வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆட்டோ டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ராஜாபட்டிணம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 30) என்றும், அவர் ஓட்டி வந்த ஆட்டோ திருட்டு ஆட்டோ என்றும் தெரியவந்தது. இவர் தெற்கு சேலம் தெற்கு அம்மாபேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவை திருடிக்கொண்டு கடந்த 10நாட்களாக ஈரோடு, திருப்பூர், பகுதிகளில் சுற்றி வந்தும் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ திருடிய வழக்கில் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த செல்போன் நல்லூர் ஈஸ்வரன் கோவில் அருகே அமர்ந்து இருந்த முகமது ரபீக் மற்றும் கார்த்திக் ஆகியோரிடம் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், செல்வத்தை கைது செய்தனர். மேலும் ஆட்டோவை, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அது மட்டுமல்லாமல் ஆட்டோவில் வைத்து இருந்து 900 கிராம் எடை கொண்ட பல்வேறு ஜோடி வெள்ளிக்கொலுசு, மெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்