தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் திருப்பூரில் இன்று முழு அடைப்பு-ரெயில் மறியல் போராட்டம்

திருப்பூரில் இன்று(வியாழக்கிழமை) தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது.

Update: 2018-04-04 23:30 GMT
திருப்பூர், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றன.

தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் பனியன் பஞ்சாலை, விசைத்தறி, சாயப்பட்டறை, பிரிண்டிங் பட்டறை, அரிசி ஆலை தொழிலாளர்கள், தனியார் மோட்டார் வாகன தொழிலாளர்கள், ஆட்டோ, வேன் டிரைவர்கள், பேக்கரி தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். வணிகர் சங்கத்தினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் திருப்பூரில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இன்று மூடப்படும். தனியார் பஸ் மற்றும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் தடைபடும் வாய்ப்பு உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு திருப்பூர் பெரியார், அண்ணா சிலை முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டு பின்னர் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்தநிலையில் முழு அடைப்பு போராட்டம் குறித்து பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டவர்களிடம் ஆதரவு கேட்டு திருப்பூர் மாநகரின் பல பகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து நேற்று ஆதரவு கேட்டனர்.

திருப்பூர் புதிய பஸ் நிலையம், பி.என்.ரோடு, பாண்டியன்நகர், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமையில் தொ.மு.ச. மாநில துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் மற்றும் கிருஷ்ணன்(காங்கிரஸ்), முத்துக்கண்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சிவபாலன்(ம.தி.மு.க.) உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்து முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டனர்.

தொழிற்சங்கத்தினர் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதால் அரசு பஸ்களை முழுமையாக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அரசு பஸ்களை வழக்கம் போல் இயக்குவதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்