காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 90 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-04 23:00 GMT
ஈரோடு, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. ரெயில் மறியல், சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து தனியார் அமைப்பினரும், வணிகர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர்.

இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சின்னுசாமி மற்றும் கட்சியினர் பலர் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் திரண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக நடந்து சென்றனர்.

ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ரெயில் நிலையத்திற்கு முன்பு செல்லும் சென்னிமலைரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தப்படுவதால் கைது செய்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.

அவர்களை போலீசார் கயிறு கட்டி தடுத்தனர். ஆனால் போலீசாரை தள்ளிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் நிலையத்தின் உள்ளே டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு செல்ல முயன்றனர். அதற்குள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து ரெயில் நிலைய வளாகத்தில் அமர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் பஸ், வேன்களில் ஏற்றினார்கள். இதில் 8 பெண்கள் உள்பட மொத்தம் 90 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஈரோடு ரெயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்