மத்திய அரசை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கைது

மத்திய அரசை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-04 22:30 GMT
வண்டலூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகர் தி.மு.க. நகர செயலாளர் ஜெ.சண்முகம் ஆகியோர் தலைமையில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் மறைமலைநகரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை மறைமலைநகர் போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போல நந்திவரம்-கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காட்டாங்கொளத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூர் தி.மு.க பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், ஆகியோர் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைசிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங் களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலர் சாலையில் படுத்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மறியலில் ஈடுபட்டவர்களை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மனோகரன் தலைமையில் தி.மு.க.வினர் மாங்காடு பஸ் நிறுத்தத்தில் உள்ள அண்ணா, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு குமணன்சாவடி- குன்றத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பனியில் இருந்த மாங்காடு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதில் பேரூர் செயலாளர்கள் ஜபருல்லா, சத்தியமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் நேற்று காலை நடந்த சாலைமறியல் போராட்டத்தில் தி.மு.க., த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதே போல கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் கூவத்தூர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. திருக்கழுக்குன்றம் பகுதியிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

ஏராளமானோர் கலந்து கொண்டு காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

காஞ்சீபுரம் தேரடியில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காஞ்சீபுரம் நகர தி.மு.க. செயலாளர் கே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் மதியழகன், வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாதாசன், டேவிட், ம.தி.மு.க. நகர செயலாளர் ஏகாம்பரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் 2 பெண்கள் உள்பட 108 பேரை சின்ன காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் இரட்டை மண்டபம் பகுதியில் தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. உடனடியாக பெரியகாஞ்சீபுரம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்தனர்.

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் படுநெல்லியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிறுவேடல் செல்வம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாபாத் தெற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட பொருளாளர் ஜி.சுகுமார் தலைமையில் காஞ்சீபுரம்-செங்கல்பட்டு சாலை அய்யம்பேட்டையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஏ.வி.சுரேஷ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர்.

உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகில் சென்னை-வந்தவாசி நெடுஞ்சலையில் ஒன்றிய செயலாளர் கே.ஞானசேகரன் தலைமையில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் நாகன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, தொழிற்சங்க செயலாளர் சுந்தர், மகளிர் அணி ஜெயகாந்தா உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட சுமார் 50 பேரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் கோபால், கருணாநிதி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தி.மு.க.வை சேர்ந்த பொறுப்பாளர்கள் மோகனன், ஜார்ஜ், தாஸ், காட்டரம்பாக்கம் சதீஷ், துரைபாலாஜி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொன்டார்கள்.

தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்த்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார் கள். 

மேலும் செய்திகள்