சேலம் ஜங்சனில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயற்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சேலம் ஜங்சனில் ரெயில் மறியலுக்கு முயற்சித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்திட சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சேலம் ஜங்சன் தபால் நிலையம் முன்பு திரண்டனர்.
அவர்களை ரெயில் நிலையம் உள்ளே சென்று விடாதபடி, ரெயில் நிலையம் முன்பு போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர். அங்கிருந்து மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக ஜங்சன் ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.
அப்போது ஜங்சன் ரெயில் நிலையத்தில் சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்தது. ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து கம்யூனிஸ்டு கட்சியினர் முன்னேறிச்செல்ல முயற்சித்தனர். அவர்களை முன்னேற விடாமல் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் உதவி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செந்தில், ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சம்பத், ரெயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி உள்ளிட்ட போலீசார் தடுத்தனர்.
இதனால், போலீசாருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், பரமசிவம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் விமலன், ராமன், இளைஞர் மன்ற தேசியக்குழு உறுப்பினர் பாரதி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் ரமேஷ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சங்கீதா பாலதண்டாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 150 பேரை சேலம் சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.