மத்திய அரசுக்கு எதிராக 1 கோடி இ-மெயில் அனுப்பப்படும் ஜி.கே.வாசன் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக 1 கோடி இ-மெயில் அனுப்பப்படும் என்று தஞ்சையில் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2018-04-04 23:00 GMT
தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு இ-மெயில் அனுப்பும் போராட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது.

இதனை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், மத்திய அரசுக்கு எதிராக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பயணிகள், கடைக்காரர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி கையெழுத்துக்களை பெற்றார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

ஜி.கே.வாசன் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் பெறுவது நமது உரிமை. அதை கொடுப்பது மத்திய அரசின் கடமை. இது விவசாயிகளின் பயிர் பிரச்சினை மட்டுமல்ல, உயிர் பிரச்சினை.

கடந்த மாதம் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு தவறி விட்டது. இதனால் விவசாயிகள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு துரோகம்

சட்டமும், நியாயமும் நம்பக்கம் இருக்கிறது. தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது. மாநில அரசு விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மத்திய பா.ஜ.க. அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் தேர்தல் அரசியல் செய்கிறது. தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். நாளை (வெள்ளிக்கிழமை) திருச்சியில் த.மா.கா. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிப்போம். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் போராட்டம் நடத்தினால் அவர்களும் பங்கேற்பர்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 கோடி இ-மெயில்

முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தூங்கிக்கொண்டு இருக்கிற மத்திய அரசு எழும்ப வேண்டும். அதற்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். மாநில அரசு முறையாக, சரியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் த.மா.கா. டெல்டா மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்துகிறது.

மாணவர்களும், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும், அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாக இ-மெயில் அனுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்து காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை அமைக்காததற்கும், உடனடியாக அமைக்கவும் அனுப்பி வருகிறார்கள். த.மா.கா. சார்பிலும் 1 கோடி இ-மெயில் அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்