டேங்கர் லாரிகள் மோதல்; டிரைவர் பலி மற்றொருவர் படுகாயம்

கிருஷ்ணராயபுரம் அருகே டேங்கர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு டிரைவர் படுகாயமடைந்தார்.

Update: 2018-04-04 22:45 GMT
கிருஷ்ணராயபுரம்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஒரு டேங்கர் லாரி சிமெண்டு ஏற்றிக்கொண்டு நேற்று காலை கரூருக்கு புறப்பட்டு வந்தது. இந்த லாரியை டிரைவர் சுப்பிரமணியன்(வயது 45) ஓட்டினார். இதேபோல் எதிரே சிமெண்டு ஏற்றிய மற்றொரு டேங்கர் லாரி கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்றது. இந்த லாரியை சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த டிரைவர் பழனிச்சாமி (53) ஓட்டினார்.

டிரைவர் பலி

கிருஷ்ணராயபுரத்தை அடுத்த திருக்காம்புலியூர் பாம்புகோவில் அருகே வந்தபோது 2 டேங்கர் லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 லாரி டிரைவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்த டிரைவர்களை மீட்டனர். இதில் பழனிச்சாமியை கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நிலையில் இருந்த சுப்பிரமணியனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்தில் 2 லாரிகளின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. அந்த லாரிகளை கிரேன் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் கரூர்-திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்