ராஜபாளையத்தில் ரெயில் மறியல்; முன்னாள் எம்.பி. உள்பட 107 பேர் கைது

ராஜபாளையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. லிங்கம் உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 107 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2018-04-04 22:30 GMT
ராஜபாளையம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்து வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ராஜபாளையம் ரெயில் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ராமசாமி, நகர செயலாளர் ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு எதிராகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முறையான அழுத்தம் கொடுக்காத தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்தினுள் செல்ல முற்பட்டனர். துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் குவிக்கப்பட்ட போலீசார், போராட்டக்குழுவினரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தி.மு.க. வினருடன் ரெயில் நிலையம் வந்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ரெயில் மறியல் போராட்டத்திற்கு அனுமதி கேட்டார். அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரெயில் ராஜபாளையம் ரெயில் நிலையத்துக்குள் வந்தது. இதைப்பார்த்ததும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போலீசாரின் எதிர்ப்பை மீறி உள்ளே சென்று ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து முன்னாள் எம்.பி. லிங்கம் உள்பட 107 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.10 நிமிட தாமதத்திற்கு பின்னர் ரெயில் புறப்பட்டுச் சென்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டேட் வங்கி முன்பு நாம்தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். வக்கீல் ஜெயராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்