இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் செல்போனில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது

இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் செல்போனில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-04 22:15 GMT
மதுரை,

இலங்கையில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் மதுரை வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, மதுரையை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் சுல்தான் அலாவுதின்(வயது 30) என்பவர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் போலியாக தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐ-போன் இருந்தது. அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது, அதில் சுமார் 200 கிராம் எடை கொண்ட தங்கம் இருப்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த அதிகாரிகள் அவர் கொண்டு வந்த ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை பறி முதல் செய்தனர்.

இதுபோல் இலங்கையில் இருந்து வந்த அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியான ராமநாதபுரத்தை சேர்ந்த நைனார் சவுகத்அலி(29) என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டியில் 2 அடுக்குகள் இருந்தது தெரியவந்தது. மேல் அடுக்கில் சிகரெட் பண்டல்களும், அதன் கீழ் அடுக்கில் அனுமதியின்றி கொண்டு வந்த 10 ஐ-போன்களும் இருந்தன.

அதற்கு முறையாக வரி செலுத்தாததால் அந்த 10 ஐ-போன்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக நைனார் சவுகத்அலியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தின் சுங்கப் புலனாய்வு துறையின் உதவி கமிஷனராக வெங்கடேஷ்பாபு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் சுமார் 10-க்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இவர், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவில் தென்இந்திய தலைவராக 3 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

இவரது அதிரடி நடவடிக்கையால் மதுரை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரது தீவிர முயற்சியின் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் செய்திகள்