சுவராஜ் இந்தியா கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் புட்டண்ணய்யாவின் மகனுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

Update: 2018-04-04 21:30 GMT
மண்டியா,

சுவராஜ் இந்தியா கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மறைந்த புட்டண்ணய்யா எம்.எல்.ஏ.வின் மகன் தர்ஷனுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் சுவராஜ் இந்தியா கட்சி போட்டியிட உள்ளது. இதைதொடர்ந்து அந்த கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் தேசிய தலைவர் யோகேந்திர யாதவ் வெளியிட்டு உள்ளார். அதன்படி மேல்கோட்டை தொகுதியில் தர்ஷன் புட்டண்ணய்யா, மத்தூர் தொகுதியில் லிங்கே கவுடா, யாதகிரி தொகுதியில் பட்டீல், மகாதேவபுரா தொகுதியில் ரமேஷ் சந்திரா, செல்லகெரே தொகுதியில் பூதய்யா, ஹனூர் தொகுதியில் ஸ்ரீகண்டசாமி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் தர்ஷன் புட்டண்ணய்யா, கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த சட்டமன்ற உறுப்பினரும், விவசாயிகள் சங்க மாநில தலைவருமான புட்டண்ணய்யாவின் மகன் ஆவார். அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டதை விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். மறைந்த புட்டண்ணய்யா எம்.எல்.ஏ., கர்நாடக சர்வோதயா பக்‌ஷா என்ற கட்சியில் அங்கம் வகித்தார். அந்த கட்சி கடந்த ஆண்டு(2017) சுவராஜ் இந்தியா கட்சியுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னர் கட்சியின் தேசிய தலைவர் யோகேந்திர யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுவராஜ் இந்தியா கட்சி மக்களின் நலனுக்காக பாடுபடும். ஊழல் இல்லாத ஆட்சி நடத்தப்படும். மக்கள் ஊழல் இல்லாத ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். மேலும் மக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் உடனடியாக செய்து கொடுக்கப்படும். சுவராஜ் இந்தியா கட்சி தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகம், பன்முகத்தன்மை, மக்களுக்கான மேம்பாடு ஆகியவை இருக்கும்.

கர்நாடகத்தில் தலித் மக்கள், விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சுவராஜ் கட்சி கர்நாடகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என யோகேந்திர யாதவ் கூறினார்.

மேலும் செய்திகள்