நல்ல நண்பர்களுடன் பழகுங்கள்: கல்லூரி விழாவில் போலீஸ் சூப்பிரண்டுபேச்சு
தந்தை சொல்லை மந்திரமாக ஏற்று நடந்தால் வாழ்க்கையில் உயர்ந்தநிலையை அடையலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேசினார்.
வேலூர்,
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சுகிர்தராணி ஜூலினா தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் சந்திரபாபு வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் அருணா அறிக்கை வாசித்தார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கல்லூரி காலம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாதது. மீண்டும் கிடைக்காதது. கல்லூரி காலமான 3 வருடம் விரைவில் ஓடிவிடும். நீங்கள் கல்லூரியில் இருந்து எதைக்கொண்டு போகிறீர்கள். முதலில் கல்வி, அடுத்தது தேடினாலும் கிடைக்காத நண்பர்களின் நட்பு.
உங்களை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை. சான்றோன் என கேட்பது தாய்க்கு மகிழ்ச்சி. உங்களிடமிருந்து பெற்றோர் வேறுஎதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் கஷ்டப்பட்டு, கடன்வாங்கி கனவுகளோடு உங்களை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியது படிப்பது மட்டும்தான். படிக்கும் காலத்தில் நீங்கள் சிறிது தடம்புரண்டாலும் உங்களுக்கு, உலகம் சூனியமாகத்தான் தெரியும்.
மாணவர் பருவத்தில் கூடா நட்பு இல்லாமல், நல்ல நண்பர்களோடு பழக வேண்டும். அவர்கள்தான் வாழ்க்கையின் கடைசிவரை வருவார்கள். கெட்ட நண்பர்கள் சீக்கிரமாக மறைந்து விடுவார்கள். ஆனால் அவர்களிடம் கற்ற கெட்ட பழக்கங்கள் கடைசிவரை வரும். எனவே நல்ல நண்பர்களோடு பழகுங்கள்.
தாய் தெய்வம் போன்றவர், தந்தை சொல் ஒவ்வொன்றும் மந்திரம் போன்றவை. தந்தை சொல்லை மந்திரமாக ஏற்று நடந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.