காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து கடலூர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-04 22:00 GMT
கடலூர், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று காலை கடலூர் சுற்றுலா மாளிகை முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் கட்சியினர் ஒன்று திரண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி எதிரே மஞ்சக்குப்பம் தலைமை தபால் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்ற கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அந்த அலுவலகத்தின் முன்பக்க கதவை பூட்டி அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் கட்சியினர் கதவின் மேல் பகுதிவழியாக ஏறி வளாகத்துக்குள் புகுந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் யாரும் அலுவலகத்துக்குள் வந்துவிடாமல் இருப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தின் உள்பக்க கதவை ஊழியர்கள் பூட்டு போட்டு பூட்டினர். உடனே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கதவின் வெளிப்பகுதியில் பூட்டு போட்டு பூட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர செயலாளர் கமலநாதன், ஒன்றிய செயலாளர்கள் ரிச்சர்ட் தேவநாதன், உலகநாதன், கார்த்தி, மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் செந்தில், மாணவர் அணி அருள்பாபு, மாநில மகளிர் அணி செயலாளர் அமராவதி மற்றும் நிர்வாகிகள் சிலம்பு, அல்போன்ஸ், வாசு, கிட்டுகுமார், தண்டபாணி, பாருக்கான் உள்ளிட்ட 60 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

பாஸ்போர்ட் சேவை மையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பூட்டு போட்டு பூட்டியதால் அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் உள்ளே வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாவியை வாங்கி வந்து பூட்டை திறந்தனர். இதன்பிறகு பொதுமக்களும், அலுவலக ஊழியர்களும் வந்து சென்றனர்.

அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை பூட்டு போடுவதற்காக சென்றனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கையில் இருந்த பூட்டையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மணிவண்ணன், மாவட்டசெயலாளர் சேகர், வட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன், வட்ட குழு உறுப்பினர்கள் ஏழுமலை, குமார், குமரன், பாலு, தமிழ்நாடு மீனவர் பேரவை சுப்புராயன் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மேலும் செய்திகள்