காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சியினர் 4-வது நாளாக போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்திலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. 4-வது நாளாக நேற்று கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை வழியாக எஸ்.பி.ஐ. திடல் வரை கண்டன ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்குமாறு வழிநெடுகிலும் உள்ள கடைக்காரர்களிடம் ஆதரவு திரட்டினர்.
பின்னர், எஸ்.பி.ஐ. திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், கம்பத்தில் தி.மு.க. நகர செயலாளர் சிங் செல்லபாண்டி தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக் உள்பட தோழமைக் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் கம்பம் போக்குவரத்து சிக்னலில் இருந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்து கம்பம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
போடியில் தலைமை தபால் அலுவலகம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் தலைமை தாங்கினார்.
போடி நகர தி.மு.க. செயலாளர் செல்வராஜ், திராவிட கழக நகர தலைவர் ரகுநாகநாதன், காங்கிரஸ் நகர தலைவர் முசாக் மந்திரி, ம.தி.மு.க. நகர செயலாளர் ஆரோ செல்வம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சின்னமனூர் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வினர் மாநில விவசாய தொழிலாளர்கள் அணி தலைவர் மூக்கையா தலைமையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் போஸ், மாவட்ட பொருளாளர் அருணாசேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.