அம்மாபேட்டை அருகே பரபரப்பு - பாலை ரோட்டில் கொட்டி மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே பாலை ரோட்டில் கொட்டி மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Update: 2018-04-03 23:26 GMT
அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள குட்டைமுனியப்பன் கோவில் அடுத்த குப்பிச்சிபாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் 681 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

குப்பிச்சிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்த உறுப்பினர்களில் 190 பேர் ஓட்டுப்போட தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டனர். வேட்புமனு தாக்கல் கடந்த 31-ந் தேதி நடந்தது. அன்று 29 பேர் மனு தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரியாக பாலசுப்பிரமணியம் என்பவர் இருந்தார். மனுக்கள் பரிசீலனை முடிந்து நேற்று முன்தினம் 11 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பால் ஊற்றுவதற்காக வந்தார்கள். அப்போது, நேற்று முன்தினம் ஒட்டப்பட்டு இருந்த இறுதி வேட்பாளர் பட்டியல் நீக்கப்பட்டு வேறு இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வாசலில் ஒன்று கூடினார்கள்.

கூட்டம் திரண்டதும் அருகே செல்லும் பவானி-மேட்டூர் ரோட்டில் திடீரென மாடுகள், பால் கேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். மேலும் பாலை ரோட்டில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த பவானி போலீசார் சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்று போராட்டக்காரர்களை ரோட்டு ஓரத்துக்கு அழைத்து வந்தார்கள்.

இதற்கிடையே பவானி தாசில்தார் சிவகாமி சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம், ‘அதிகாரிகள் வருவார்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்‘ என்றார். ஆனால் அதிகாரிகள் வருவதற்கு தாமதம் ஆனதால் ரோட்டு ஓரம் நின்ற பால் உற்பத்தியாளர்கள் அடுத்தடுத்து 2 முறை சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களை ஒவ்வொரு முறையும் போலீசார் சமாதானப்படுத்தி ரோட்டு ஓரத்துக்கு அழைத்து வந்தார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் அதிவிரைவுப்படை போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டார்கள்.

இந்தநிலையில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட துணை பதிவாளர் இளங்கோவன் சம்பவ இடத்துக்கு சென்றார். அவர் போராட்டம் நடத்தியவர்களிடம், ‘கோரிக்கை குறித்து விண்ணப்பம் தாருங்கள் பரிசீலனை செய்கிறோம்‘ என்றார். அதை ஏற்றுக்கொண்டு பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டார்கள்.

மேலும் செய்திகள்