காவிரி பிரச்சினையில் தொடர் போராட்டம்: புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு

காவிரி பிரச்சினையில் நாளை முழு அடைப்பு மற்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்று தி.மு.க. தலைமையிலான அரசியல் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-04-03 21:45 GMT
புதுச்சேரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுச்சேரியிலும் முழு அடைப்பு நடத்துவது குறித்து லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

காங்கிரஸ் கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், செயலாளர் அமுதவன், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, ம.தி.மு.க. சந்திரசேகர், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், படைப்பாளி மக்கள் கட்சி தலைவர் தங்கம், இந்திய குடியரசு கட்சி ரத்தினவேல், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன், தி.மு.க. துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், பொருளாளர் சண்.குமாரவேல், செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காவிரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசு புதுச்சேரி மற்றும் தமிழக மக்களுக்கு முற்றிலும் விரோதமான நிலையை எடுத்துள்ளதை கண்டிக்கிறோம். இதற்கான போராட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் ஓரணியில் திரள வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பினை அமலாக்காமல் புதுச்சேரி மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க புதுச்சேரி அரசு எடுக்கும் முயற்சிக்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி அளிக்காமல் முட்டுக்கட்டை போட்டு மத்திய அரசின் துரோகத்துக்கு துணைபோய் இருப்பதை கண்டிப்பது.

இதுபோன்ற செயல்களை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்துவது.

அதன்படி இன்று (புதன் கிழமை) காலை 10 மணிக்கு தூய இருதய ஆண்டவர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புல்லுக்கடை சந்திப்பு ரெயில்வே கேட்டில் மறியல் செய்வது. மாலை 3 மணிக்கு முழுஅடைப்பு குறித்த பிரசார பயணத்தை அண்ணா சிலையில் இருந்து மேற்கொள்வது.

நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது. 9-ந்தேதி வன்கொடுமை தடுப்புசட்ட தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டை கண்டித்து கண்டன கூட்டம் நடத்துவது. 12-ந்தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவது.

15-ந்தேதி பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு மத்திய அரசை கண்டித்து 3 ஆயிரம் இருசக்கர வாகன கருப்புக்கொடி பேரணியை புதுவை நகர் முழுவதும் நடத்துவது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்