ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோவை வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை நாம்தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2018-04-03 23:30 GMT
கோவை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வகாப் என்கிற தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கு போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை தாண்டி வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது சிலர் சாலையில் படுத்து கொண்டு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்