காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே உண்ணாவிரத போராட்டம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Update: 2018-04-03 23:15 GMT
திண்டுக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவை, கடந்த மார்ச் 29-ந்தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால் காலக்கெடு முடிந்த பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இதையடுத்து மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வருகிற 9-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து அ.தி.மு.க. சார்பில், ஏப்ரல் 3-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நடந்த இந்த போராட்டத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், பரமசிவம், மாவட்ட செயலாளர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. சார்பில் அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர். இதனை மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே, அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வருகிற 9-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு உண்டான உரிமை நிச்சயம் கிடைக்கும். மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தஞ்சையில் டி.டி.வி. தினகரன் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நாடகம். நாங்கள் நடத்துவது நாடகம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன், அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசீலன், பி.கே.டி.நடராஜன், ராஜ்மோகன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்