வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு தேர்தல் அதிகாரி வராததை கண்டித்து சாலை மறியல்

ஆவுடையார்கோவில் அருகே, நாவினிவயல் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு தேர்தல் அதிகாரி வராததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

Update: 2018-04-03 22:45 GMT
ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள நாவினிவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாகக்குழுவிற்கு 63 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனைக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் கூட்டுறவு சங்கத்தில் ஒட்டப்பட வேண்டும். 11 பேருக்கு மேல் வேட்பாளர்களாக இருந்தால், தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.

அதன்படி நாவினிவயல் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழுவிற்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியல் ஒட்டப்படவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை மட்டுமே நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளதாகவும், அதனால் பட்டியல் ஒட்டப்படவில்லை என்றும் மற்ற வேட்பாளர்களுக்கு தகவல் கிடைத்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கேட்டதற்கு நாளை(அதாவது நேற்று) ஒட்டப்படும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை நாவினிவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்தனர். காலை 10.30 மணி வரை தேர்தல் அதிகாரியும், சங்கத்தின் செயலாளரும் வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து ஆவுடையார்கோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளரும், அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உதயம்சண்முகம், மாநில சட்ட திருத்தக்குழு உறுப்பினர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டபோது, தான் புதுக்கோட்டையில் இருப்பதாகவும், வந்தபிறகு நிர்வாகக்குழு உறுப்பினர் பட்டியல் ஒட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் 1 மணி வரை, தேர்தல் அதிகாரி வரவில்லை. மேலும் கூட்டுறவு கடன் சங்கமும் திறக்கப்படவில்லை. இதனை கண்டித்து அவர்கள் உதயம் சண்முகம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

தொடர்ந்து மாலை 5 மணிவரை தேர்தல் அதிகாரியும், கூட்டுறவு கடன் சங்க செயலாளரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆவுடையார்கோவில் சாலையில் 2-வது முறையாக மறியலில் ஈடுபட்டதோடு திறக்கப்படாத கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்