மத்திய அரசை கண்டித்து தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் சாலை மறியல்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குளித்தலையில் 81 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-04-03 23:00 GMT
கரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராமர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் பேங்க்சுப்ரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கலீல்ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் சேஷன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் கந்தசாமி, ம.தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சண்முகம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமாரசாமி, மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், ஆதிதமிழர் பேரவை உள்பட தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்தை மாவட்டத்தில் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டன. ம.தி.மு.க. நிர்வாகி ரவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்துதல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தினர். கோவை சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர்.

பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடந்ததால் தி.மு.க. தலைமையிலான போராட்டத்திற்கு அங்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் கோவை சாலையில் தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்தனர். தங்களை போலீசார் கைது செய்வார்கள் என எண்ணி போலீஸ் வேனில் சிலர் ஏறினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவில்லை என போலீசார் கூறினர். மண்டபத்தில் தங்க வைக்க இடம் இல்லாததால் கைது நடவடிக்கை இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில் தி.மு.க. பெண் நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல கூறினர். அதன்பின் பெண் நிர்வாகிகளும் கலைந்து சென்றனர். அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் நடந்த இடம் அருகே தி.மு.க. தலைமையில் மறியலில் ஈடுபட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் முன்கூட்டியே சுதாரித்து தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குளித்தலையில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு குளித்தலை தி.மு.க. நகர செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். திருச்சி- கரூர் சாலையில் குளித்தலை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 81 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை குளித்தலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுதலை செய்தனர். 

மேலும் செய்திகள்