காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடையடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடந்த கடையடைப்பு போராட்டத்தால் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2018-04-03 22:30 GMT
மதுரை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். வணிகர் சங்கங்களின் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை நகரில் கீழமாசிவீதி, யானைக்கல் முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதிக அள விலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தது.

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் அனைத்துக்கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறி ஏற்றிவரும் வாகனங்கள் ஏதும் அங்கு வரவில்லை. ஆனால் நகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருமங்கலம் நகர் வியாபாரிகள் சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் மார்க்கெட் மற்றும் சின்னகடைவீதி, பெரியகடை வீதி மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் வளையல்கார தெரு உசிலம்பட்டி சந்திப்பில் சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல் அமீது தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் அரவிந்தன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துராமன், ஆண்டவர் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலூரில் கடை அடைப்பு போராட்டத்தால் அந்த பகுதியில் உள்ள ஓட்டல்கள், மருந்து கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், நகை கடைகள், ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மேலூர் முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்