உடுமலை அருகே ஏழுகுளம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

உடுமலை அருகே உள்ள ஏழுகுளம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-03 22:15 GMT
தளி,

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை நீராதாரமாக கொண்டு பி.ஏ.பி. பாசனத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் ஏக்கருக்கு ஆண்டுதோறும் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. பி.ஏ.பி. தண்ணீரை அடிப்படையாக கொண்டு கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் அவரை, கத்தரி, பீட்ரூட், தக்காளி, வெண்டை போன்ற காய்கறிகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருமூர்த்திஅணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள சிற்றாறுகள் மூலமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து முற்றிலுமாக நின்றது.

இதையடுத்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக பெறப்படுகின்ற தண்ணீரைக் கொண்டு முதலாம் மண்டல பாசனத்திற்கு முதல்சுற்று தண்ணீர் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்குவதற்காக அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வரப்படுகிறது.

அத்துடன் வெயிலின் தாக்கம் காரணமாக ஏழுகுளம் பாசனப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சூழலில் முதலாம் மண்டல பாசனத்திற்கு இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதை அறிந்த ஏழுகுளம் பாசன விவசாயிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தண்ணீரை பி.ஏ.பி. திட்டத்திற்கு வழங்கும் போது அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று திருமூர்த்திஅணை அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக ஏழுகுளம் பாசன விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 300 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நேற்று இரவு வரையிலும் நீடித்தது. இந்த நிலையில் இரவு 7.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் ஆர்.டி.ஓ அசோகன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாசில்தார் தங்கவேல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வரும் 5-ந் தேதி (நாளை) தண்ணீர் திறப்புக்கான அறிவிப்பு வெளியிடப்போவதாக அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருமூர்த்தி அணைப்பகுதியில் காலையில் இருந்து இரவு வரையும் பரபரப்பு நிலவியது. விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தையொட்டி தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்