திருப்பூர் மாவட்டத்தில் மருந்துக்கடைகள், ஓட்டல்களை அடைத்து போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் மருந்துக்கடைகள், ஓட்டல்கள் நேற்று அடைக்கப்பட்டு போராட்டம் நடந்தது.
திருப்பூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் மருந்துக்கடை அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூர் மாவட்டத்தில் 900 மருந்துக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் பெரும்பாலும் நேற்று செயல்படவில்லை.
திருப்பூர் மாநகரில் மட்டும் 475 கடைகள் உள்ளன. அவைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டதால் நேற்று ஒருநாள் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.40 கோடிக்கு மருந்து வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் அசோகன், இணை செயலாளர் வாசு ஆகியோர் தெரிவித்தனர். காங்கேயத்தில் மருந்து வணிகர்கள், மருந்துக்கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினார் கள்.
இதுபோல் ஓட்டல் உரிமையாளர்களும் நேற்று ஓட்டல்களை அடைத்தனர். திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய ஓட்டல்கள் நேற்று செயல்படவில்லை.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த அறிவிப்பு செய்தார். திருப்பூர் மாநகரில் 20 சதவீத கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன. மற்ற கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன.