கோவில்பட்டியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று காலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாராம், ஒன்றிய செயலாளர் முருகேசன், ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, நெசவாளர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், சரவணன், இளைஞர் அணி லவராஜா மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அனைவரும் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.