கர்நாடக அரசியலில் பரபரப்பு குமாரசாமியுடன் நடிகர் சுதீப் திடீர் சந்திப்பு

குமாரசாமியை நடிகர் சுதீப் நேரில் சந்தித்து பேசி இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-04-02 23:55 GMT
பெங்களூரு,

கன்னட திரையுலகில் மிக பிரபலமாக இருப்பவர் நடிகர் சுதீப். இவர் தமிழில் ‘நான் ஈ‘, நடிகர் விஜயின் புலி படத்தில் நடித்து பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையாவை சுதீப் நேரில் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரசில் சேருமாறு அவருக்கு சித்தராமையா அழைப்பு விடுத்தார். அவர் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாயின. அதைத்தொடர்ந்து சுதீப்பை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவருமான குமாரசாமியை பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நடிகர் சுதீப் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் கவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்யுமாறு சுதீப்பை குமாரசாமி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பரிசீலித்து முடிவு எடுப்பதாக சுதீப் கூறியதாக சொல்லப்படுகிறது. நடிகர் சுதீப்பின் இந்த சந்திப்பு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்