பிவண்டியில் பயங்கர தீ விபத்து 10 குடோன்கள் எரிந்து நாசம்

பிவண்டியில் நடந்த பயங்கர தீ விபத்தில் 10 குடோன்கள் எரிந்து நாசமாகின.

Update: 2018-04-02 23:29 GMT
தானே,

தானே மாவட்டம் பிவண்டி, குண்டாவிலியில் ஸ்ரீகணேஷ் வளாகம் அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் எண்ணெய் மற்றும் டயர் குடோன்கள் உள்ளன. நேற்று காலை வளாகத்தில் உள்ள ஒரு எண்ணெய் குடோனில் தீ பிடிக்க தொடங்கியது. அங்கு இருந்த ஒருவர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென பரவியது. இந்தநிலையில் கல்யாண், உல்லாஸ்நகர், பிவண்டி, தானேயில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. அவர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் சுமார் 10 குடோன்கள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ தீ மளமளவென அதிக குடோன்களுக்கு பரவிவிட்டது. எனவே உடனடியாக தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது. அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் சம்பவ இடத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. எனவே காயம், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை ” என்றார்.

மேலும் செய்திகள்