காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தென்காசியில் 3 இடங்களில் சாலை மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நேற்று தென்காசியில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் 134 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நேற்று தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்திற்கு தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், த.மு.மு.க நகர தலைவர் அகமது ஷா, ம.மா.க மாவட்ட செயலாளர் கொலம்பஸ் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ ரசாக், நகர தி.மு.க செயலாளர் சாதிர், விவசாய தொழிலாளர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் கோமதி நாயகம் மற்றும் 4 பெண்கள் உட்பட 88 பேர் கலந்து கொண்டனர். அவர்களை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்சல் குமார் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் பழனி நாடார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை, மாவட்ட செய்தி தொடர்பாளர் அண்ணாமலை உட்பட 12 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில துணை செயலாளர் விஜய் முருகன் தலைமையில் தென்காசி பழைய பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முத்துப்பாண்டியன், மாவட்ட செயலாளர் வேல்மயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி மற்றும் 5 பெண்கள் உட்பட 34 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டங்களால் தென்காசியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.