சுகாதார கேட்டை ஏற்படுத்தும் மீன் அரவை ஆலையை மூட வேண்டும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
சுகாதார கேட்டை ஏற்படுத்தும் மீன் அரவை ஆலையை மூட வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் வெங்கடேஷ் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது, விளாத்திகுளம் தாலுகா சூரங்குடியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சூரங்குடி கிராமத்தில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்து வருகிறார்கள். எங்கள் கிராமத்தில் சிலோன் காலனி அருகே தனியார் மீன் அரவை ஆலை ஒன்று உள்ளது. அங்கிருந்து வெளிவரும் புகை மற்றும் கழிவுகளால் கிராமம் முழுவதும் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த மீன் அரவை ஆலைக்கு அருகே ஆரம்பப்பள்ளி உள்ளது. அங்கு 160 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த துர்நாற்றத்தால் அவர்களுக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
அகில பாரத இந்து மகாசபா மாநில இளைஞரணி செயலாளர் அய்யப்பன் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டு உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது. நீதிமன்ற ஆணையின்படி அந்த ஒலிபெருக்கிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் தினமும் நாய்க்கடி சிகிச்சைக்காக 10 பேருக்கு மேல் தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளாத்திகுளம் ஒன்றியத்தில் கீழ விளாத்திகுளம் முதல் சோலைமலையன்பட்டி வழியாக பி.மீனாட்சிபுரம் வரை செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீரமைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் மாதவன் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டு பகுதியில் உள்ள வரதவிநாயகர் கோவில் தெருவில் ஏ.வி.எஸ். தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடம் அருகே டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அடிக்கடி தீப்பொறி ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திரேஸ்புரம் அருகே உள்ள வடபாகம் தீர்த்தகரை விநாயகர் கோவில் முத்தரையர் நகரில் சுமார் 250 குடும்பங்கள் உள்ளன. கடற்கரை பகுதியான அங்கு தெருவிளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வெளியே வர சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் கடல் தொழிலுக்கு செல்ல முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் பழுதடைந்து காணப்படும் மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த தங்கமாரியப்பன் தனது உறவினர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கு 3 மகன்கள். 3-வது மகன் வசந்தகுமார் (வயது 17), வாகைகுளத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி மர்மமான முறையில், ஊருக்கு வெளியே உள்ள ஒரு கிணற்றில் வசந்தகுமார் இறந்து கிடந்தார். என் மகன் வசந்தகுமாருக்கு நீச்சல் தெரியும். அப்படி இருக்க அவன் எப்படி கிணற்றில் விழுந்து இறந்திருக்க முடியும். என் மகனின் சாவில் மர்மம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் என் மகன் இறப்பிற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
தூத்துக்குடி ஆறுமுகநேரியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் உஜ்ஜில்சிங் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலை அமைந்து உள்ளது. இங்கு இருந்து வெளியேறும் அமில கழிவுகளால் அந்த பகுதியில் நிலம், நீர், காற்று மாசு அடைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த தொழிற்சாலை சார்பில் அமில கழிவுகளை நிலத்தில் தேக்கி வைத்திருப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. கிணறு அமைக்கும்போது அமிலங்கள் வெளியேறுகிறது. பல கிராமங்களில் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த தொழிற்சாலையுடன் இணைந்து விதிமுறை மீறல்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கூறி இருந்தார்.