காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-02 23:00 GMT
மன்னார்குடி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் சிலர் தங்களது தலையில் பச்சை துண்டை கட்டி கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு வந்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்தவர்கள், கல்லூரி வளாகத்தை விட்டு வெளியில் வந்து போராடுமாறு அழைத்தனர். அதற்கு மாணவர்கள் மறுத்து விட்டனர். இதனால் அனைத்திந்திய பெருமன்றத்தை சேர்ந்தவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொண்டனர். இந்த மோதலின்போது மாணவர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருதரப்பினரும் மோதலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மோதல் சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் ரவி மன்னார்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜ் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த முகமது அஸ்லாம்(வயது 20), விஜயகுமார்(19), பாலமுருகன்(20), பகத்சிங்(21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரும், கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்