கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

தென்தாமரைகுளம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-04-02 22:15 GMT
தென்தாமரைகுளம்,

சாமித்தோப்பு அருகே உள்ள செட்டிவிளையை சேர்ந்தவர் ரமேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்யலட்சுமி (வயது 35). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலையில் சுசீந்திரம் அருகே நல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர், இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

தென்தாமரைகுளம் அருகே ஈத்தங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, 2 வாலிபர்கள் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்து சத்யலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். ரமேஷ், கொள்ளையர்களை சிறிது தூரம் விரட்டி சென்றார். ஆனால், கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், நாகர்கோவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தென்தாமரைகுளம் போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். பல இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கன்னியாகுமரி அருகே சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். தொடர்ந்து, அவர்களை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், சத்யலட்சுமியிடம் இருந்து நகை பறித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பிடிப்பட்ட கொள்ளையர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்