பெரம்பலூர் கூட்டுறவுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம்

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. வினரின் முறைகேடுகளை கண்டித்து பெரம்பலூர் கூட்டுறவுத்துறை அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-02 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம், காரை, பூலாம்பாடி உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நேற்று முதல் கட்டமாக தேர்தல் நடந்தது.

இதில் ஆளும் கட்சியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் துணை நிற்பதாகவும் குற்றம் சாட்டி நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அங்கு நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த தவறிய அ.தி.மு.க. அரசை கண்டித்தும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

மேலும் பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இங்கு நேரில் வர வேண்டும். அப்போது தான் அவரிடம் கோரிக்கைகளை எடுத்துரைத்து தேர்தல் முறைகேடுகள் குறித்து முறையிட முடியும் என தி.மு.க.வினர் தெரிவித்தனர். பெரம்பலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி உள்பட போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே 2-ம் கட்ட கூட்டுறவு தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனையும் முறையாக நடக்கவில்லை என தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து கூட்டுறவுத்துறை அலுவலக சுவற்றில் போஸ்டர்களை ஒட்டினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவரிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர். தொடர்ந்து அதிகாரிகளின் செயல்பாடுகள் நடு நிலைமையாக இல்லாவிடில் அடுத்தகட்டமாக மறியல் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க.வினர் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரவிசந்திரன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்