காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, 92 பேர் கைது

புதுவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய வருவாய் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக அமைப்பினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-02 22:45 GMT
புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘பந்த்’ போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் புதுவை காந்தி வீதியில் உள்ள மத்திய வருவாய் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று காலை திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சின்னமணிக்கூண்டு அருகே ஒன்று திரண்டனர்.

அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மத்திய வருவாய் துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்தநிலையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்பை மீறி செல்ல முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மக்கள் வாழ்வுரிமை செயலாளர் ஜெகநாதன், தமிழர் களம் அழகிரி, பெரியார் திராவிடர் விடுதலைக்கழகம் வீர.மோகன் உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் இயக்கம் சார்பில் பல்வேறு அமைப்புகள் முற்றுகையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை-கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் முன்பு புதுச்சேரி வக்கீல் கார்த்திகேயன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினார்கள். 

மேலும் செய்திகள்