கரிகாத்தூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை
சேத்துப்பட்டு ஒன்றியம் கரிகாத்தூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை கலெக்டர் கந்தசாமி பெற்றுக்கொண்டார்.
இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 457 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி, மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு ரூ.3 ஆயிரத்து 296 மதிப்பில் இலவச நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், காது கேளாத மாற்றுத் திறனாளி 4 பேருக்கு காதொளி கருவி, பார்வையற்ற மாற்றுத் திறனாளி 4 பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் போளூர் தாலுகா கீழ்பட்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்துள்ள மனுவில் ‘நாங்கள் கீழ்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களது தறி நெய்யும் தொழிலுக்கு பாவு போட கீழ்பட்டு கிராமத்தில் பட்டா நிலம் உள்ளது. இதனை நாங்கள் 110 ஆண்டுகாலமாக பாவு போடும் இடமாக அனுபவித்து வருகிறோம். அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் வீடு கட்டி தற்போது மயான சாலை மற்றும் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
சேத்துப்பட்டு ஒன்றியம் கரிகாத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், கரிகாத்தூர் பகுதியில் செய்யாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் தற்போது தண்ணீர் ஓடாததால், வறண்டு காணப்படுகிறது. தற்போது அந்த ஆற்றில் பகல், இரவு நேரங்களில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மணல் கொள்ளையினால் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.