மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அமில வாயுவை சுவாசித்த பெண் தொழிலாளர்கள் மயக்கம்

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்தபோது, அமில வாயுவை சுவாசித்த 3 பெண் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர்.

Update: 2018-04-02 20:30 GMT
மதுரை,

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகளுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், அறுவை சிகிச்சை அரங்கிற்கு ஆஸ்பத்திரி அதிகாரிகள் ஆய்வுக்காக சென்றனர். அப்போது அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்யும்படி அங்கிருந்த ஒப்பந்த தொழிலாளர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களான அழகு மீனாள், பன்னீர்செல்வம், காளஸ்வரி ஆகிய 3 பேர், அறுவை சிகிச்சை அரங்கை அமிலத்தை பயன்படுத்தி சுத்தம் செய்துள்ளனர். அப்போது அறையின் வெளிக்கதவு பூட்டப்பட்டதாக தெரிகிறது. பெண்கள் கதவை தட்டியும் அங்கிருந்தவர்கள் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். அப்போது அமில வாயுவை சுவாசித்த அவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த வழியாக சென்றவர்கள், மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

அந்த 3 பெண்களுக்கும் தொண்டை பகுதியில் புண் ஏற்பட்டு பேச்சு சரியாக வராத நிலையிலும் அவர்களை அவரசம், அவசரமாக சிகிச்சை முடிந்து விட்டதாகக்கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பெரிய ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியனிடம் கேட்டபோது, ‘சம்பவம் தொடர்பாக அன்று பணியில் இருந்த நர்சு மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 3 பெண்களும் இருந்த அறை பூட்டப்பட வில்லை. சுத்தம் செய்யும் பணிக்கு அதிகமாக அமிலத்தை பயன்படுத்திய நிலையில் அதில் இருந்து வந்த வாயுவை சுவாசித்ததால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்‘ என்றார். 

மேலும் செய்திகள்